மாணவர்களை ஆட்டிப்படைக்கும் பகிடிவதை!


பகிடிவதை என்பது ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமில்லாத ஏதேனும் ஒரு செயலை செய்யுமாறு யாரோ சிலரால் தொடர்ந்து கேட்கப்படல், தொடரப்படல் அல்லது அழுத்தம் கொடுத்தலாகும்.

Posted on:
2017-03-02 23:26:55

மாணவர்களை ஆட்டிப்படைக்கும்

பகிடிவதை என்பது ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமில்லாத ஏதேனும் ஒரு செயலை செய்யுமாறு யாரோ சிலரால் தொடர்ந்து கேட்கப்படல், தொடரப்படல் அல்லது அழுத்தம் கொடுத்தலாகும்.

கிடி என்றால் நகைச்சுவை என்று பொருள். கேலி செய்வது என்றும் சொல்லாம். உள்ளத்திற்குப் பூரிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவல்லது இந்தச் சொல். ஆனால் இப்போது பல்கலைக்கழகம் என்றால் முதலில் பகடிதான். படிப்பு அல்ல என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்.

வரலாற்றில் கல்வியில் தனித்துவ கௌரவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தை பகிடிக்கும் முதன்மையானதாக்கியிருக்கிறார்கள் சில பொறுப்பாற்ற மாணவர்கள்.

சைட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு கோஷங்களில் இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்தே செயற்படுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி போராட்டங்கள் நீண்ட வரலாற்றினைக் கொண்டது. அப்பருவத்தில் சீனியர் ஜூனியர் என்ற பிரிவினை இருக்காது. அரசாங்கமும் மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த சரித்திர வரலாறுகளும் உண்டு.

எமது நாட்டில் இலவச கல்வியானது முதலாம் வகுப்பு தொடங்கி பல்கலைக்கழகம் மட்டுமன்றி கலாநிதி பட்டங்களையும் தாண்டி சென்று புத்திஜீவிகளாக உருவாக்க வழிவகுக்கிறது. அத்துடன் தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்பது அநேக பெற்றோரினது ஏன் பிள்ளைகளினது கனவும் கூட. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களின் ஏக்கம் ஒரு புறம், பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பகிடி வதை என்ற ​பேரிலான உடல், உள கஷ்டங்கள் மறுபுறம்.

‘ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்

சீனியருக்கும் ஜூனியருக்கும்

கல்லூரிச் சாலை எங்கும்

ராக்கிங் நடக்கும்

ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே

ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்

நட்புக்கு ராக்கிங் கூட

பாதை வகுக்கும்’

இந்த பாடல் ‘காதல் தேசம்’ படத்தில் கவிஞர் வாலியினால் எழுதப்பட்ட வரிகளாகும். பாடசாலை நட்புடன், பல்கலைக்கழக நட்பு இன்னும் நெருக்கத்தை உருவாக்கும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடலாகும்.​

பல கலைகளையும் கற்க செல்லும் புதிய மாணவர்களுக்கு ‘ராக்கிங்’ என்ற பெயரில் பகிடிவதை இடம்பெறுவது, அநேகருக்கு வேதனைத் தரும் நிகழ்வாக இருக்கின்றது. தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டுமா எனும்கேள்வி அனேக பெற்றோரின் மனங்களில் எழுவதைத் தடுக்க முடியாமலுள்ளது. பகிடிவதைக்கு பயந்து பல்கலைக்கழகம் செல்லாமல் விட்டவர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்று குறிப்பிடலாம். பகிடிவதையினால் பத்துக்கு மேற்பட்டவர்கள் மரணித்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் சரீர ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

ராக்கிங் ஊடாக பாதிக்கப்படுவது சில மாணவர்களேயானாலும் சீனியர் மாணவர்கள் மேல் ஆத்திரமும் மூர்க்கமும் உருவாகுகிறது. ஆனால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மன உளைச்சலை தமது ஜூனியர்கள் மூலம் தீர்த்துக்ெகாள்ள வேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்,இது ஒரு தொடர்கதையாக நீடிக்கின்றது. இந்த ‘பகிடிவடு’வினை நீக்க பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர், சீனியர் மாணவர்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிடிவதை (ragging) என்பது பல்கலைக்கழங்களில் உடல், உள ரீதியாகப் புதிய மாணவர்கள் பழைய மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காகச் செய்யப்படுவது என்று கூறப்படும் இந் நடவடிக்கையால் புதியவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டும் உண்டு. இந்தப் பகிடிவதை தொடக்கக் காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும் காலப்போக்கில் இது வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும் வித்திட்டுள்ளது. பகிடிவதை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பகிடிவதை 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில் உருவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகிறது பேச்சுரீதியான துன்புறுத்தல், உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தலாக அவற்றை வகைப்படுத்தலாம்.

இலங்கையில் ​முதலாவது மிக மோசமான பகிடிவதை 1974 ஆம் ஆண்டு வித்தியாலங்கார என்றழைக்கப்பட்ட களனி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகடிவதையைக் குறிப்பிடலாம். அதனை விசாரிக்க வி. டபிள்யூ. குலரத்ன ஆணைக்குழு அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் நியமிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ரூபா ரத்னசீலி என்ற பேராதனை பல்கலைக்கழக மாணவி இப்பகிடிவதையினால் கடுமையாக பாதிக்கப்பட்டாள். 1997 ஆம் ஆண்டு பேராதனை பொறியியல்பீட மாணவனான வரப்பிரகாஷ் (21 வயது) மாணவன் பகடிவதையினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலின்ஸ் அகராதியைப் பொறுத்தவரையில், ராக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் அல்லது செயல்முறைகளில் பெரிய வன்முறையை உருவாக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் முரட்டுத்தனமான நடத்தைகள் எனப்படும். கேம்பிரிட்ஜ் அகராதியின்படி வேடிக்கையான அதே சமயத்தில் இரக்கமற்ற சிறிய கொடூரச் செயலே தற்போதைய பதிப்பில் எவ்வகையான வாய்மொழி, வாய்மொழியற்ற பிறசெயல்கள், பாவனைகள், எழுத்து வடிவில் அல்லது அறிகுறிகள் மூலம் உடல் ரீதியாக, உணர்வு மற்றும் உளவியல் ரீதியாக இடையூறுகளை விளைவிக்கக் கூடியதே “ராக்கிங்” எனப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை என்பது ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமில்லாத ஏதேனும் ஒரு செயலை செய்யுமாறு யாரோ சிலரால் தொடர்ந்து கேட்கப்படல், தொடரப்படல் அல்லது அழுத்தம் கொடுத்தலாகும்.

சில மாணவர்கள் தற்கொலை வரை செல்ல பகிடிவதையே காரணம். உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் இறப்புக்கும் காரணமாவதுண்டு. ஒழுங்கற்ற கும்பலால் வன்முறையாகவும், மூர்க்கத்தனமாகவும் பகிடிவதை நடத்தப்படுகிறது. இக்கும்பலின் உளவியல் குறித்து கேள்விகள் எழுகின்றன. பகிடிவதை இலங்கையிலும் இந்தியாவிலுமே மிக மோசமாக நடைபெறுகிறது.